Friday, August 28, 2020

சர்க்கரை நோயும், பாத பாதுகாப்பும்

நம் கால் பாதம் குட்டியான 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 100 தசைகளையும், 250,000 வேர்வை சுரப்பிகளை உள்ளடிக்கியது.


 ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 115,000 மைல்கள் நடக்கின்றான். நடப்பது ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது பாதங்களுக்கும், உடம்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கிறது. 

உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 56,000 பேர் சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமல் சர்க்கரை நோயால்  பாதங்களை இழக்கின்றார்கள்.

உலகில் அதிகம் பேரை கொல்லும் நான்காவது வியாதி தான் இந்த
மதுமேகம், மேகநோய், இனிப்பு நீர்,நீரிழிவு என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய். இந்நோயால் எண்ணற்ற பாதிப்புகள் உச்சி முதல் பாதம் வரை ஏற்படுகிறது. இந்த நோயின் தாக்கமானது கண்கள்,இதயம், மூளை மற்றும் கால்களை பாதிக்கும்.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்தும் குறைந்துமாய் மாறி மாறி ஏற்படும் மாற்றத்தால் உடலில் உள்ள  உறுப்புகளில் பல வித பாதிப்புகள் உருவாகிறது.மேலும் இது குறிப்பாக பாதங்களின் நரம்புகளை செயல் இழக்கச் செய்கிறது. இதனை டயாபட்டிக் நியூரோபதி என்று கூறுகிறோம். 

சில நோயாளிகளுக்கு இரத்த குழாய் அடைப்பையும் சேர்த்து ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களும் உரிய கவனிப்பு இன்றி 

கடைசியில் காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.

சர்க்கரை நோயாளிகளின்      பாத பிரச்சினைகள் மூன்று வழிகளில் நிகழ்கிறது. அவை

1.நரம்புகள் பாதிக்கப்பட்டு உணர்வு குறைபாட்டினால் நோயாளிகள் நடக்கும் போது கூடுதல் அழுத்தம் கொடுத்து நடப்பார்கள்.அவ்வாறு நடக்கும் போது அழுத்தம் கொடுத்த இடங்களில் மட்டும் தோலில் காய்ப்பு ஏற்படுகிறது.அதையே நம்மில் பலர் கால் ஆணி என்போம்.

அந்த காய்ப்பு மீண்டும் மீண்டும் நோயாளிகள் நடக்கும் போது இன்னும் அதிகமாக வளர்ந்து அந்த காய்ப்புக்கு அடியில் உள்ள நல்ல சதை பகுதிகளை புண்ணாக்கி விடுகிறது.

பிறகு அந்த ஓட்டையான பகுதிகளில் கிருமி தொற்று ஏற்பட்டு விரல் மற்றும் பாதத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

2.இரத்தக் குழாய்களில் அதிகப்படியான கொழுப்பு படிந்து இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு புண் உண்டாகும் போது அவற்றை ஆற்றும் சக்தியை இழந்து விடுகிறார்கள்.

3.சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.இதன் காரணமாக பாதத்தில் காயம் மற்றும் புண் ஏற்பட்டு பின் கிருமிகள் புகுந்து அவை எளிதில்  அதிகரித்து வேகமாக பரவும்.

பாத பராமரிப்பிற்கான வழிகள்:

👍நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவர்களுக்கு தகுந்த அளவில் காலணிகளை  பயன்படுத்த வேண்டும். வெயில் நேரத்தில் காலணி இல்லாமல் நடக்கக்கூடாது.கட்டாயமாக காலணிகள் அணிய வேண்டும். அப்படி அணியாமல் நடக்கும் வேளையில் வெப்பத்தால் நாம் அறியாமலேயே பாதங்களில் கொப்பளங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

👍.கழிப்பறை சென்று வரும்போது பாதத்தின் விரல்களுக்கு இடையே சேரும் ஈரப்பதத்தை ஒரு சிறிய துணியைக் கொண்டு சரிவர உலர்த்த வேண்டும். இல்லையென்றால்  பூஞ்சை தொற்று ஏற்பட்டு புண் உண்டாக  காரணமாக அமைந்துவிடும். 

👍நீரழிவு நோயாளிகளுக்கான காலணிகள் சந்தையில் பெருமளவு கிடைக்கிறது. 

ஆனால் எது மிகவும் சிறந்தது என்று பாத சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை செய்து வாங்குவது நல்லது.

அந்த காலணிகளை அவர்கள் பயன்படுத்தும் போது பாத நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். பொதுவாக இவர்கள் மென்மையான தோல் மற்றும் காற்றோட்டம் உள்ள காலணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. 

👍அதே போல் நீண்டதாக வளரும் கால் நகங்கள் உள்நோக்கி வளரலாம் இது உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். எனவே நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறிது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாக வெட்டி விடலாம்.

நாம் முகங்களை எவ்வாறு  சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ? அதே அளவுக்கு பாதத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதோடு மறக்காமல் காலணிகளை அணிந்து உங்கள் பாதங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக மிக முக்கியம்.அத்தோடு மேற்கூறியவற்றையெல்லாம் நீங்கள் செய்யும் போது உங்கள் பாத பிரச்சனைகள் இருந்து நீங்கள் விடுதலை பெறலாம்.


சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பிரச்சினைகளுக்கென்றே சிறப்பு பயிற்சி எடுத்த பாத சிகிச்சை நிபுணரின் ஆலோசனை நன்மை பயக்கும்.

Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcarecentre@gmail.com

No comments:

Post a Comment